48 வயது அஸ்மினாவும், அவரது சக பணியாளரான சுபைதாவும் தங்களது அம்மாக்கள் தூக்கி எறிந்த கோதுமை வைக்கோலில் சிறுகூடைகள் முடைந்ததை நினைவுகூர்கின்றனர். மேவாட் பிராந்தியத்தில் மற்ற பெண்களைப் போன்று இவர்களும் தங்களது அம்மாக்களின் அழுத்தத்தால் நெசவு கற்றனர். அதுவே ஒரு நாள் வாழ்வாதாரமாக மாறும் என அவர்கள் கற்பனையிலும் நினைக்கவில்லை.
“நாங்கள் அவற்றை செய்து அப்போது உறவினர்களுக்கு கொடுப்போம். அப் ஜப் பிகான் லகேன் தோ ஹம் நா தேவேன் ஃப்ரீ மென் [இப்போது அவற்றை விற்கிறோம். யாருக்கும் சும்மா கொடுப்பதில்லை],” என்று கூறி அஸ்மினா சிரிக்கிறார்.
ஹரியானாவின் நுஹ் மாவட்டம் கசேரா கிராமத்தில் உள்ள தனது வீட்டின் முற்றத்தில் சிமென்ட் பெஞ்சில் அமர்ந்திருக்கும் அவர், கை நீளத்திற்கு இருக்கும் கோதுமை குச்சி (பாரம்பரிய கோதுமை வைக்கோல்) ஒன்றை இழுக்கிறார். அவற்றை மெல்லிய ஊசிக் கொண்டு ஐந்து இழைகளாக பிரிக்கிறார். ஒரு இழையை வளைத்து சங்கேரியை (ஆழமற்ற கூடை) முடைய ஆரம்பிக்கிறார்.
“அகர் கர் மேன் மெஹ்மான் ஆகா அவுர் சங்கேரி மேன் ரொட்டி தர் கே நா தி, தோ யூ கெங்கே கி அஸ்மினா நே பிளேட் மெம் ரொட்டி தர் கே தி, சங்கேரி மேன் நா தி [வீட்டிற்கு உறவினர்கள் வந்தால், கூடையில் ரொட்டி கொடுப்பதில்லை, அவர்கள் தட்டில் தான் தர வேண்டும் என்பார்கள்],” என்கிறார் அஸ்மினா.
ஹரியானாவின் மேவாட் பிராந்தியத்திலும், ராஜஸ்தானிலும் பாரம்பரியமாக பெண்களால் முடையப்படும் சங்கேரி பல தேவைகளுக்கு பயன்படும் ஒரு கூடை. ஒரு காலத்தில், ஈத் போன்ற பண்டிகை காலங்களில், திருமணங்களில் அவற்றை பரிசாக கொடுப்பார்கள்.

















